5394. | 'தாழித்தண் கடல்தம்மோடும், ஏழுக்கு ஏழ் உலகுஎல்லாம், அன்று, ஆழிக் கையவன்அம்பு, அம்மா ! ஊழித் தீ எனஉண்ணாவோ ? |
அம்மா ! -தாயே (இராமன்); அன்று - உன் செய்தி கேட்கும் அன்று; ஆழிக்கை அவன் அம்பு - சக்கரம் ஏந்திய இராமபிரானின் அம்புகள்; தாழி - தாழி போன்ற; தண் - குளிர்ந்த; கடல் தம்மோடும் - கடல்கள் ஏழுடனே; ஏழுக்கு - கீழே உள்ள ஏழ் உலகுக்குச் சரியாக; ஏழ் - மேலே உள்ள ஏழான; உலகு எல்லாம் - எல்லா உலகங்களையும்; ஊழித் தீ என - ஊழிக் காலத்தில் தோன்றும் காலாக்கினிபோல்; உண்ணாவோ - உண்டு முடிக்காதோ. தாழி - பானை.'தாழி தரையாகத் தண் தயிர் நீராக' என முன்பு பேசப் பெற்றது. (கம்ப. 2615) தாழி என்பதற்கு ஆழ்ந்த என்னும் பொருள் கூறுவதும், தாழ் இத்தண் கடல் என்னும் பொருள் கூறுவதும் மிகை. பானை தீண்டப்படாப் பொருளோ அறியேன் நிலத்தை நாலுக்கு நாலு, எட்டுக்கு மூன்று என்பர். அங்கு உபயோகப்படுத்தப்படும் நான்கன் உருபைக் கருதுக. நான்கன் உருபை மூன்றன் உருபாக்கி ஏழொடு ஏழ் என்று கூறுவாரும் உளர். 'முடிவி்னில் தீக்கும் எரியின் மும்மடி கொடியன சுடுசரம் எய்தான்' (கம்ப. 6606) என்று பின்பு பேசப்படும். இங்கு கூறப்பெற்ற உரை திரிசிரபுரம் மகாவித்துவான் வி. கோவிந்தப் பிள்ளை அவர்கள் கருத்துத் தோன்ற எழுதிய உரை. ஆழி - சக்கரமே. கவிச்சக்கரவர்த்தி இராமபிரானைத் திருமால் என்றே பேசுவார். ஆதலின் இங்கு வேற்றுரை பேசுவது ஒளசித்திய விரோதம். அம்மா... ஆச்சரியப் பொருளில் வழங்குவதாகவும் கொள்ளலாம். (50) |