கலி விருத்தம் 5398. | 'ஊழியின் இறுதியின் உரும் எறிந்தென, கேழ் கிளர் சுடுகணை கிழித்த புண் பொழி தாழ் இருங்குருதியால், தரங்க வேலைகள் ஏழும் ஒன்றாகநின்று, இரைப்பக் காண்டியால். |
ஊழியின்இறுதியின் - யுகங்களி்ன் முடிவுக்காலத்திலே; உரும் எறிந்தென - இடிகள் தாக்கினாற் போல; கேழ்கிளர் - ஒளி விளங்கும்; சுடுகணை - வருத்துகின்ற அம்புகளால்; கிழித்த - கிழிக்கப் பெற்ற (அரக்கர்களின் உடலில் உள்ள); புண்பொழி - புண்கள் சொரிகின்ற; தாழ் இரும் - மேலே இருந்து கீழே விழும் பெரிய; குருதியால் - இரத்த அருவிகளால்; தரங்க வேலைகள் ஏழும் - அலைகளுடன் கூடிய ஏழு கடல்களும்; நின்று இரைப்ப - இடைவிடாமல் ஒலிப்பதைக்; காண்டி - காண்பாயாக. யுகாந்தகாலத்தில் இடிகள் மலைகளில் தாக்கும். அதுபோல இராமபிரானின் அம்பு மலைபோன்ற அரக்கர்களைத் தாங்கும். அவருடம்பு குருதி சொரியும். தாழ்தல் - மேலிருந்து விழுதல். பொங்கு அருவிதாழும் புனல் வரை (நாலடி - 231) தாழ் என்பதற்கு ஆழம் என்று உரை கூறப் பெற்றது. சொற் பொருத்தம் நன்று. மற்றவை ஆய்க. இவ் விருத்தம் விளம்-விளம்-மா- கூவிளம் என்னும் சீர்களை முறையே பெற்று வரும். இத்தகு பாடல்கள் இந்நூலில் 2177 உள்ளன. (54) |