5400. | 'விண்ணின்நீளிய நெடுங் கழுதும், வெஞ் சிறை எண்ணின் நீளியபெரும் பறவை ஈட்டமும், புண்ணின் நீர்ப்புணரியில் படிந்து, பூவையர் கண்ணின் நீர்ஆற்றினில் குளிப்பக் காண்டியால். |
விண்ணின் -ஆகாயத்தைப் போல; நீளிய - நீண்ட; நெடுங் கழுதும் - பெரிய பேய்களும்; வெஞ்சிறை - கொடிய சிறகைப் பெற்ற; எண்ணின் நீளிய - எண்ணத் தொடங்கில் முடிவற்றிருக்கின்ற; பெரும் பறவை ஈட்டமும்- பெரிய பறவைக் கூட்டமும்; புண்ணின் - அரக்கர்களின் புண்ணிலிருந்துவரும்; நீர்ப்புணரியில் - இரத்தக் கடலில்; படிந்து - நீராடிவிட்டு (பிறகு);பூவையர் - மகளிரின்; கண்ணின் - கண்களில் வடியும்; நீர் ஆற்றினில் -கண்ணீராகிய ஆற்றிலே; குளிப்பக் காண்டி - நீராடுதலைப் பார்ப்பாயாக. நெடும் கழுது -பெரும் பேய். கடலில் குளிப்பவர்கள், உப்பு நீங்க நன்னீரில் நீராடுவது மரபு. பட்டினப்பாலை 'தீது நீங்கக் கடலாடியும் மாசு போகப் புனல் படிந்தும்' என்று பேசிற்று. (99.10) அங்கு இனியர் 'மாசு' என்பதற்கு உப்பு என்று பொருள் கூறினார். உப்பு நீங்க நன்னீரில் குளிப்பதைப் போல, பேய்களும் பறவைகளும் குருதிக் கறை நீங்க நன்னீரில் குளித்தன என்க. ஆல் - அசை. (56) |