5403.

'வினையுடைஅரக்கர் ஆம் இருந்தை வெந்து உக,
சனகி என்று ஒருதழல் நடுவண் தங்கலான்,
அனகன் கை அம்புஎனும் அளவு இல் ஊதையால்,
கனகம் நீடுஇலங்கை நின்று உருகக் காண்டியால்.

     வினையுடை -தீத்தொழில்களை உரிமையாகப் பெற்ற; அரக்கர் ஆம்இருந்தை - அரக்கர்களாகிய கரியானது; வெந்து உக - எரிந்து
சாம்பலாய்ச்சிதறும்படி; சனகி என்று- சீதை என்று சிறப்பிக்கப்படும்; ஒரு
தழல் -
ஒப்பற்ற நெருப்பு; நடுவண் தங்கலால் - (அதன் நடுவில்)
இருத்தலினாலே;அனகன் கை அம்பு எனும் - இராமபிரானின் கைகள்
ஏவும் அம்பு என்னும்;அளவில் ஊதையால் - அளவற்ற பெருங்காற்றால்;
நீடு -
பெரிய; கனகஇலங்கை - பொன் மயமான இலங்கை மாநகர்; நின்று
உருக -
நிலைத்துஉருகுவதை; காண்டி - காண்பாயாக.

      வினை என்றதுதீவினையே. அரக்கர்கள் கரி, சீதை, நெருப்பு,
இராமபிரானின் அம்பு காற்று, இலங்கை பொன், கரியின் நடுவில் உள்ள
நெருப்பு. காற்றால் மூண்டு எரியப் பொன் உருகும். கருநிறம் உடைமையால்
அரக்கரைக் கரியாகவும், சிவந்த ஒளியாலும் தூய்மையாலும் தனது நிலையால்
கொடியவரை எரித்தழிக்கும் தன்மையாலும் சீதையைத் தழலாகவும் விரைந்து
வரும் தன்மையாலும் பிராட்டியின் கற்பாகிய தழலுக்கு மேன்மை
விளைவித்தலாலும் அம்பைக் காற்றாகவும் பொன்மயமான இலங்கையைப்
பொன்னாகவும் உருவகப்படுத்தினார் (வை.மு.கோ. விளக்கம்)        (59)