5408.

'அணங்கு இள மகளிரொடு அரக்கர் ஆடுறும்
மணம் கிளர்கற்பகச் சோலை வாவிவாய்,
பிணங்குறு வால்முறை பிடித்து, மாலைய
கணம் கொடுகுரக்குஇனம் குளிப்பக் காண்டியால்.

     இளம் - இளம்பருவமுடைய; அணங்கு மகளிரொடு - தெய்வ மகளிர்
போலும் பெண்களுடன்; அரக்கர் ஆடுறும் - அரக்கர்கள் நீராடும்; மணம்
கிளர் -
வாசனை மிகுந்த; கற்பகச் சோலை - கற்பகம் அமைக்கப் பெற்ற;
வாவிவாய் -
பொய்கையின் கண்ணே; குரங்கு இனம் - குரங்குக் கூட்டம்;
பிணங்குறு வால் -
மாறுபட்டு வளைந்துள்ள வாலை; முறைபிடித்து -
வரிசையாகப் பற்றிக்கொண்டு; மாலைய - வரிசைகளை உடையதாய்;
கணங்கொடு -
கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டு; குளிப்ப - நீராடுதலை;
காண்டி -
காண்பாயாக.

     ஆல் - அசை.அரக்கர்கள் நீராடிய பொய்கையில் குரங்குகள் நீராடும்
என்க. அரக்கர் ஆடுறும் கற்பகச் சோலை - வாவி. இதுவே தழாத் தொடர்.
ஆடுறும் என்னும் எச்சம் சோலையைத் தழுவாமல் வாவியைத் தழுவிற்று.
குடர் முறை முறை பிடித்து - கழுதினம் ஆடக் காண்டி என்று பாடம்
கொண்டு, அரக்கர்களின் குடலைப் பிடித்தபடி
 பேய்கள் நீராடுவதைப்பார்
என்று உரை கூறப் பெற்றது. பேய்கள் போர்க்களத்தி்ல் ஆடுவதாகப்
பேசப்படுவதே பெருவழக்கு.                                 (64)