5412. | 'சோகம்வந்து உறுவது, தெளிவு தோய்ந்து அன்றோ ? மேகம் வந்துஇடித்து உரும்ஏறு வீழ்கினும், ஆகமும் புயங்களும்அழுந்த, ஐந் தலை நாகம் வந்துஅடர்ப்பினும், உணர்வு நாறுமோ ? |
(இராமபிரானுக்கு) சோகம் வந்துஉறுவது - உள்ளம் சோர்வு அடைவது; தெளிவு தோய்ந்து அன்றோ - அது தெளிவை அடைந்தால் அல்லவா; மேகம் - மேகமானது; வந்து - அணுகி; இடித்து - இடியிடித்து; உரும் ஏறு - பேரிடியை; வீழ்க்கினும் - வீழச் செய்தாலும்; ஆகமும் புயங்களும் - உடம்பும் தோள்களும்; அழுந்த - வாட்டம் அடைய; ஐந்தலை நாகம் - ஐந்து தலையைப் பெற்ற நாகம்; வந்து - அணுகி; அடர்ப்பினும் - தாக்கினாலும்; உணர்வு நாறுமோ - (பெருமானுக்கு) உணர்ச்சி உண்டாகுமா. பெருமான், தன்நினைவற்றுக்கிடப்பதால் சோகம் வருத்தாது என்க. இடிக்கும் நஞ்சுக்கும் எட்டாத நிலையில் பெருமான் உள்ளான். பெருமான் ஒரு நாளாகிலும் தெளிந்திருந்தால் அல்லவா சோகத்தை அறியப் போகிறான் என்பது பழைய உரை (அடை - பதி) மேகம் வந்து உரும் ஏறு வீழினும் என்னும் பாடத்திற்கு மேகத்திலிருந்து வெளிப்பட்டு இடி வீழ்ந்தாலும் என்று பொருள் கொள்ள வேண்டும். உரும் ஏறு எழுவாய். வீழ்க்கினும் என்னும் பாடத்திற்கு மேகம் எழுவாய். நாறுதல் - தோன்றுதல். அறங்கள் நாறும் மேனியார் (வாலிவதை.3) (68) |