5414.

' "இந் நிலை உடையவன் தரிக்கும்" என்றியேல்,
மெய்ந் நிலைஉணர்ந்துழி விடை தந்தீதியேல்,
பொய்ந் நிலைகாண்டியால்; புகன்ற யாவும், உன்
கைந் நிலைநெல்லியங்கனியின் காட்டுகேன்.

(அம்மையே)

     மெய்ந்நிலை- (என்னுடைய சொல்லின்) உண்மைத் தன்மையை;
உணர்ந்துழி (உம்) - உணர்ந்த இடத்தும்; இந்நிலை உடையவன் - இந்த
நிலைமையில் இருக்கும் இராமபிரான்; தரிக்கும் என்றியேல் -
பொறுத்திருப்பான் என்பாயானால்; விடை தந்து - (அடியேனுக்கு) விடை
கொடுத்து; ஈதியேல் - அடையாளப் பொருளைத் தருவாயே ஆனால்; புகன்ற
யாவும் -
என்னால் கூறப்பட்டவை யாவற்றையும்; கைநிலை -
கையின்கண்ணே உள்ள; நெல்லிகனியில் - நெல்லிக் கனியைப் போல;
காட்டுகேன் - நிரூபித்துக் காண்பிப்பேன் (அப்போது); பொய்நிலை -
தரிக்கும் என்றது பொய்யான தன்மையை; காண்டி - பார்ப்பாய்.

     உணர்ந்துழியும்என்பதில் உள்ள உம்மை தொகையாக உள்ளது.
விடைதந்து அடையாளப் பொருள் வழங்க வேண்டும் என்பது அனுமன்
வேண்டுகோள்.                                              (70)