5416. | 'எண்ணஅரும் பெரும் படை, நாளை, இந் நகர் நண்ணிய பொழுது,அதன் நடுவண், நங்கை ! நீ, விண் உறுகலுழன்மேல் விளங்கும் விண்டுவின், கண்ணனை என்நெடும் வெரிநில் காண்டியால். |
நங்கை - அம்மையே ! எண்ண அரும் பெரும் படை - கணக்கிட முடியாத பெருஞ்சேனை; நாளை - நாளைய தினத்தில்; இந்நகர் நண்ணிய பொழுது - இந்த நகரை யடைந்த போது; அதன் நடுவண் - அந்தச் சேனையின் நடுவில்; விண் உறு கலுழன் மேல் - விண்ணிலே பறக்கும் கருடன் மேலே; விளங்கும் - பொலிவு பெறுகின்ற; விண்டுவின் - திருமாலைப் போல; கண்ணனை - இராம பிரானை; என் - என்னுடைய; நெடும் வெரிநில் - பெரிய தோள்களில்; நீ காண்டி - நீ பார்ப்பாயாக. எண்ணுதல் -கணக்கிடுதல். கருதுதல் என்றும் கூறலாம். கலுழன் - கருடன். கண்ணன் - திருமால். இங்கே இராமபிரானைக் குறிக்கிறது. கவிச்சக்கரவர்த்தி பல இடங்களில் இராமபிரானைக் கண்ணன் என்று குறிப்பார். 'கண்ணனைக் கண்ணில் நோக்கி கனிந்தனன்' (கம்ப. 1965) கண்ணன் - என்பது பாகதச் சொல் என்பர் பேராசிரியர். (கருங்கண்ணனை -கோவையார்) இதை வடமொழித் திரிபு என்று கூறுவது பிழை. காண்டி - ஆல் ஆல் - அசை. (72) |