5417. | 'அங்கதன்தோள்மிசை, இளவல், அம் மலை பொங்குவெங்கதிர் எனப் பொலிய, போர்ப் படை இங்கு வந்துஇறுக்கும்; நீ இடரும் ஐயமும் சங்கையும்நீங்குதி; தனிமை நீங்குவாய். |
இளவல் - இளைய பெருமாள்;அங்கதன் தோள்மிசை - அங்கதன் தோளின் மேலே; அம்மலை - அந்த உதயமலையில்; பொங்கும் - கிளர்ந்து எழுகின்ற; வெங்கதிர் எனப் பொலிய - வெம்மையான சூரியனைப் போல விளங்கித்தோன்ற; போர்ப்படை - போர் செய்யும் வானரப்படை; இங்கு வந்து - இந்த இலங்கைக்குள் வந்து; இறுக்கும் - தங்கும்; நீ - நீ; இடரும் -துன்பத்திலிருந்தும்; சங்கையும் - அச்சத்திலிருந்தும்; நீங்குதி - நீங்குவாயாக.(இனிமேல்); தனிமை நீங்குவாய் - தனித்திருப்பதிலிருந்தும் நீங்குவாய். இளைய பெருமான்செந்நிறம் உடையவன். ஆகையால், அவன் பொங்கு வெங்கதிர் என்று கூறப் பெற்றான். சங்கை என்னும் சொல் அச்சப் பொருள் தந்தது. சென்னை அகராதி உடன்படு்ம். 'நிருதர் என்னும் சங்கையும் இல்லாவண்ணம் என்று நாகபாசப் படலம் கூறும். (கம்ப. 8052) (73) |