5424.

வாங்கினாள், தன் மலர்க்கையில்; மன்னனை
                                  முன்னா,
ஏங்கினாள்; அவ்அனுமனும், 'என்கொல் இது ?'
                                  என்னா,
வீங்கினான்;வியந்தான்; உலகு ஏழும் விழுங்கித்
தூங்கு கார் இருள்முற்றும் இரிந்தது சுற்றும்.

(பிராட்டி)(சூடாமணியை)

     தன் - தன்னுடைய; மலர்க்கையில் - மலர் போன்ற கைகளில்;
வாங்கினாள் - எடுத்தாள்; மன்னனை முன்னா - இராமபிரானை எண்ணி;
ஏங்கினாள் - ஏக்கமுற்றாள்; அனுமனும் - (அது கண்ட) திருவடியும்; இது -
பிராட்டியின் கையில் உள்ள இப்பொருள்; என்கொல் என்னா - யாதோ
என்று; வீங்கினான் - உடல் பூரித்தான்; வியந்தான் - ஆச்சரியப்பட்டான்
(அப்போது) (மணியின் ஒளியால்); உலகு ஏழும் விழுங்கி - ஏழு
உலகங்களையும் உட் கொண்டு; தூங்கு - உறங்குகின்ற; கார் இருள் முற்றும்
-
கரிய
 இருள் முழுவதும்; சுற்றும் - சுற்றுப் புறங்களில்; இரிந்தது -
ஓடிப்போயிற்று.

     மன்னன் என்றதுஇராமபிரானை, இந்தச் சூடாமணி என்னால் மிகவும்
போற்றிப் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தது. துக்கம் உண்டாகும் போது இதைக்
கண்டு உன்னைக் கண்டவள் போல மிகவும் களிக்கின்றேன்' என்று பிராட்டி
பேசியதாக வான்மீகம் பேசும். அதைக் கருத்திற் கொண்ட கவிச்சக்கரவர்த்தி
'மன்னனை முன்னா ஏங்கினாள்' என்றார். மன்னன் என்றது 'சனகன்' என்றும்,
தசரதன் என்றும் கூறலாம் என்பர். சனகன் சூடாமணி வழங்கியவன்; தசரதன்
அந்த மணியைப் போற்றியவன் என்பர். இருள் உறங்குவதாகக் கூறும் மரபு
உண்டு போலும். 'நெடுந்தூங்கிருள்' (கம்ப. 9087) தூங்கிருள் வெய்யோற்கு
ஒதுங்கிப் புக்கிருந்தான் அன்ன பொழில் (நளவெண்பா. சுயம் 22) தூங்கு
இருள், தொங்கும் இருள் என்று உரை கூறப் பெற்றது. தூங்கிருள் - செறிந்த
இருள் என்று புறப்பாட்டுரை கூறும். துயில் மடிந்தன்ன தூங்கிருள் - (புறம்
126) இருள் தூங்கு இறுவரை (கலி - குறிஞ்சி7) இருள் தூங்கு சோலை. (கலி-
குறிஞ்சி 14) இனியர் 'செறிந்த' என்று உரை வகுத்தார்.               (80)