அனுமன் மன நிலை கலிவிருத்தம் 5429. | நெறிக்கொடு வடக்கு உறும் நினைப்பினில் நிமிர்ந்தான், பொறிக் குல மலர்ப் பொழிலிடைக் கடிது போவான், 'சிறித்தொழில் முடித்து அகல்தல் தீது' எனல், தெரிந்தான்; மறித்தும் ஓர்செயற்கு உரிய காரியம் மதித்தான். |
ெ்நறிக் கொடு -(அனுமன்இனித் தான் செல்ல வேண்டிய) வழியைக் கருதி; வடக்கு உறும் - வடக்கு முகமாகச் செல்லும்; நினைப்பினில் - நினைப்போடு; நிமிர்ந்தான் - அதற்கு ஏற்பப் பெரியவடிவத்தை எடுத்துக் கொண்டு; பொறிக்குல மலர்ப்பொழில் இடை - வண்டுக்கூட்டங்கள் மொய்க்கும் மலர்கள் நிறைந்த அசோகவனத்திடையே; கடிது போவான் - விரைந்து செல்பவனாகிய அனுமன்; சிறு தொழில் முடித்து அகல்தல் - (பிராட்டியைக் கண்ட இந்த) சிறு செயலை மட்டும் முடித்துக் கொண்டு போவது; தீது எனல் தெரிந்தான் - (தன் ஆற்றலுக்குக்) குறைவு என்று உணர்ந்து; மறித்தும் செயற்கு உரிய ஓர் காரியம் மதித்தான் - மீண்டும் தான் செய்வதற்குப் பொருப்பான ஒரு செயலைச் செய்ய எண்ணினான். பிராட்டியைக்கண்டு பேசிப் போவதாகிய செயல், தனது ஆண்மைக்குக் குறைவு என்பதும், வேறு ஒரு பெருஞ் செயலைச் செய்ய வேண்டும் என்பதும் அனுமனது கருத்து. பொறி - புள்ளி. வண்டைக் குறித்தது; ஆகுபெயர். பொறி - வண்டு; பொறி கலந்து பொழில். (தேவாரம்) 'வண்டுக் கூட்டம் எழ' என்பது வைகறைப் பொழுதை உணர்த்துகின்றது. சிறுத்தொழில் வலித்தல் விகாரம். சிறுக்குட்டன். சிறுத் தொண்டன் என்பன போன்றது. (1) |