5430.

'ஈனம் உறுபற்றலரை எற்றி, எயில் மூதூர்
மீனநிலையத்தின் உக வீசி, விழி மானை
மானவன் மலர்க்கழலில் வைத்தும்இலென் என்றால்,
ஆன பொழுது, எப்பரிசின், நான் அடியன்
                                  ஆவேன் ?

     ஈனம் உறும்பற்றலரை ஏற்றி - இழிவான செயல்கள்பொருந்திய
பகைவர்களாகிய அரக்கர்களைத் தாக்கி அழித்து; எயில் மூதூர் - மதில்கள்
சூழ்ந்த இந்த இலங்கை நகரை; மீனநிலையத்தின் உகவீசி - மீன்களுக்கு
இருப்பிடமான கடலில் சிதறி விழும்படி வீசி எறிந்து; விழி மானை - கண்
பார்வையால் மானை ஒத்த பிராட்டியை; மானவன் மலர்க் கழலில் வைத்தும்
இலென் என்றால் -
இராமபிரானுடைய தாமரை மலர் போன்ற திருவடிகளில்
(காணிக்கை போல) வைத்து வணங்கவில்லை என்றால்; ஆனபொழுது -
அந்நிலையில் நான் உள்ள போதும்; எப்பரிசின் நான் அடியன் ஆவேன் -
எவ்விதத்தில் நான் இராமபிரானுக்கு  உண்மை அடியவனாக ஆவேன் ?

     தலைவனதுவிருப்பத்தை நிறைவேற்றுவதே உண்மை அடியவனின்
கடமை. இராமபிரானுடைய பகைவர்களை ஒழித்தலை, அடியவனாகிய
அனுமன், தனது கடமையாகக் கருதினான். மான்விழி என்பது விழிமான்
எனமாறியது; இலக்கணப் போலி - புறநகர், வாயில் என்பன போல.
மீனநிலையம் - கடல். புதிய சொல்லாட்சி.                        (2)