5431.

'வஞ்சனைஅரக்கனை நெருக்கி, நெடு வாலால்
அஞ்சினுடன் அஞ்சுதலை தோள் உற அசைத்தே,
வெஞ் சிறையில்வைத்தும்இலென்; வென்றும்இலென்;
                                    என்றால்,
தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றல் தகும் அன்றோ ?

     வஞ்சனை அரக்கனை- கபடத்தன்மை பொருந்திய அரக்கனாகிய
இராவணனை; நெடு வாலால் - எனது நெடிய வாலினால்; அஞ்சினுடன்
அஞ்சு தலை தோள் உற -
பத்துத் தலைகளும் இருபது தோள்களும் ஒன்று
சேரும் படி; நெருக்கி அடைத்து - நெருக்கிக் கட்டி; வெம்
சிறையில்வைத்தும் இலென் -
கொடிய சிறைக்காவலில் வைத்தேனும்
அல்லேன்; வென்றும் இலென் - போரில் அவனை வென்றேனும் அல்லேன்;
என்றால் - என்று சொல்லுவமானால்; ஒருவர்க்கு ஒருவர் தஞ்சம் என்றல் -ஒருவருக்கு ஒருவர் பற்றுக்கோடு என்ற உறுதிமொழி கூறல்; தகும்
அன்றோ-
தகுதி உடையதாகுமல்லவோ (தகுதி உடையதாகாது என்றபடி).

     தஞ்சம்ஒருவர்க்கு ஒருவர் என்றது. இராமபிரானும் சுக்கிரீவனும் உற்ற
துணையாக நட்புக் கொண்டதைக் குறிப்பது. தன் அரசனான சுக்கிரீவனுக்கு
உள்ள பொறுப்பை அனுமன் தன்மேல் ஏற்றிக் கொண்டதாகும். அசைத்தல் -
கட்டுதல்.                                                    (3)