5434.

'இப் பொழிலினைக் கடிது இறுக்குவென்; இறுத்தால்,
அப் பெரிய பூசல்செவி சார்தலும், அரக்கர்
வெப்புறுசினத்தர் எதிர் மேல்வருவர்; வந்தால்,
துப்பு உறமுருக்கி, உயிர் உண்பல், இது சூதால்.

     இப்பொழிலினைக்கடிது இறுக்குவென் - இந்தச் சோலையை
விரைவில் முறித்து அழிப்பேன்; இறுத்தால் - அவ்வாறு யான் அழித்தால்;
அப்பெரிய பூசல் செவி சார்தலும் -
அந்தப் பெரிய ஆரவாரம் தமது காதில்பட்டவுடன்; அரக்கர் வெப்பு உறு சினத்தர் - அரக்கர்கள்
கொடுமைமிக்ககோபத்தினராகி; எதிர் மேல் வருவர் - என்மேல் எதிர்த்துப்
போர் புரியவருவார்கள்; வந்தால் -
 அவ்வாறு வந்தால்;துப்பு உற முருக்கி
உயிர் உண்பல் -
எனது வலிமையைக் கொண்டு அவர்களை அழித்து,
உயிர்களை வாங்குவேன்; இது சூது - இதுவே யான் செய்யத்தக்க உபாயம்.

     அரக்கரைப்போருக்கு அழைக்கும் உபாயத்தை உறுதிப் படுத்திக்
கொண்டான் அனுமன். சூது - உபாயம். 'சூது என்று கனவும் சூதும்
செய்யாதே ! திருவாய்மொழி (2.10.10) துப்பு - வலிமை; 'துப்புடையாரை' -
பெரியாழ்வார் திருமொழி (423)                               (6)