5438. | வேரொடுமறிந்த சில; வெந்த சில; விண்ணில் காரொடு செறிந்தசில; காலினொடு வேலைத் தூரொடு பறிந்தசில; தும்பியொடு வானோர் ஊரொடு மலைந்தசில; உக்க, சில நெக்க; |
சில வேரொடுமறிந்த - சில மரங்கள் வேரொடுகீழே விழுந்தன; சிலவெந்த - சில மரங்கள் வெந்து போயின; சில விண்ணில் காரொடு செறிந்த- சில மரங்கள் ஆகாயத்தில் உள்ள மேகத்தோடு நெருங்கின; சில காலினொடு வேலை தூரொடு மறிந்த - சில மரங்கள் காற்றினால் கடலில் உள்ள சேற்றோடு குப்புற்று வீழ்ந்து அழிந்தன; சில தும்பியொடு வானோர் ஊரொடு - சில, வண்டுகளோடு தேவ நகரங்களில் சென்று; மலைந்த - மோதின; சில நெக்க உக்க - சில பிளந்து சிதறிச் சிந்தின. அசோக வனத்துமரங்கள், இடம் பெயர்ந்து சென்றமையைத் தெரிவிக்கின்றது இக்கவிதை. (10) |