5441.

முடக்கு நெடுவேரொடு முகந்து உலகம் முற்றும்
கடக்கும்வகைவீசின, களித்த திசை யானை,
மடப் பிடியினுக்குஉதவ மையின் நிமிர் கை வைத்து
இடுக்கியனஒத்தன, எயிற்றின் இடை ஞால்வ.

     உலகம் முற்றும்கடக்கும் வகை - உலகம் முழுவதும் கடந்து
செல்லும்படி; முடக்கும் நெடு வேரொடு முகந்து வீசின - வளைந்துள்ள
நீண்ட வேருடனே பிடுங்கி அனுமனால் வீசி எறியப்பட்ட சில மரங்கள்;
களித்த திசையானை எயிற்றின் இடை ஞால்வ -
மத மேற் கொண்ட திக்கு
யானைகளின் தந்தங்களின் நடுவில் தொங்குவனவாகி; மடப் பிடியினுக்கு
உதவ -
இளமையுள்ள பெண் யானைகளுக்குக் கொடுக்க; மையின் நிமிர்
கைவைத்து இடுக்கியன ஒத்த -
மேகத்தைப் போல மேலே நிமிர்ந்து எழுந்த
தன் துதிக்கையில் வைத்து இடுக்கிக் கொண்டுள்ளனவற்றைப் போலத்
தோன்றின.

     அனுமனால்வீசப்பட்ட மரங்கள் சில, யானையின் தந்தங்களில் தங்கின.
அவை, அந்த யானை பிடிக்குக் கொடுக்க, கையினால் இடுக்கி எடுத்து
வைத்தது போன்றிருந்தன. யானையின் எயிற்றிடை ஞால்வ; ஞால்வ, ஒத்தன.
                                                          (13)