5442.

விஞ்சை உலகத்தினும், இயக்கர் மலைமேலும்,
துஞ்சுதல் இல்வானவர் துறக்க நகரத்தும்,
பஞ்சி அடிவஞ்சியர்கள் மொய்த்தனர், பறித்தார்,
நஞ்சம்அனையானுடைய சோலையின் நறும்பூ.

     நஞ்சம்அனையானுடைய சோலையின் நறும் பூ - விடம் போன்ற
கொடிய இராவணனது அசோகவனத்து நறுமணம் மிக்க மலர்களை; விஞ்சை
உலகத்தினும் இயக்கர் மலை மேலும் -
வித்தியாதரர் உலகத்திலும்
யட்சர்கள் வாழும் மலைகளின் மீதும்; துஞ்சுதல் இல் வானவர் துறக்க
நகரத்தும் -
இறத்தல் என்பது இல்லாத தேவர்கள் வாழ்கின்ற சுவர்க்க
நகரத்திலும்; பஞ்சி அடி வஞ்சியர்கள் - (வாழ்பவர்களான) செம்பஞ்சுக்
குழம்பு ஊட்டிய பாதங்களை உடைய மகளிர்; மொய்த்தனர் பறித்தார் -
கூட்டமாய் நெருங்கி வந்து பறித்துக் கொண்டார்கள்.

     இராவணனதுபூந்தோட்டத்து மலர்களை விஞ்சை மகளிர் முதலியோர்
பறித்துக் கொள்ளும் வகையில், அனுமன் எப்புறத்தும் மரங்களை வீசி
எறிந்தனன் என்பது இதன் கருத்து.                             (14)