5446.

இடந்த மணிவேதியும், இறுத்த கடி காவும்,
தொடர்ந்தனதுரந்தன படிந்து, நெறி தூர,
கடந்து செலவுஎன்பது கடந்தது, இரு காலால்
நடந்து செலல்ஆகும் எனல் ஆகியது, நல் நீர்.

     இடந்த மணிவேதியும் - (அனுமன்)பெயர்த்தெறிந்த
இரத்தினமயமானமேடைகளும்; இறுத்த கடிகாவும் - ஒடித்த காவலுள்ள
சோபையின்மரங்களும்; தொடர்ந்தன தரந்தன - தொடர்ந்து வேகமாகச்
சென்று; படிந்து,நெறிதூர - கடலிலே ஒழுங்காக விழுந்து, அதனை
வழிபோலத் தூர்த்துவிட்டதனால்; நல்நீர் - மணம் கொண்ட கடலானது;
கடந்து செலவு கடந்தது-
தாண்டிச் செல்ல வேண்டியது என்ற தன்மையைக்
கடந்ததாகி; நடந்துசெலல் ஆகும் எனல் ஆகியது - நடந்து செல்லக்
கூடியது என்றுசொல்லத்தக்கதாயிற்று.

     அனுமன் இலங்கைவரும் போது, கடல் கடப்பதற்குரியதாக இருந்தது.
திரும்பும் போது அது, நடப்பதற்குரியதாயிற்று.                    (18)