5447.

வேனில்விளையாடு சுடரோனின் ஒளி விம்மும்
வானினிடை வீசியஅரும் பணை மரத்தால்,
தானவர்கள்மாளிகை தகர்ந்து பொடி ஆய-
வான இடியால்ஒடியும் மால் வரைகள் மான.

     வேனில் விளையாடுசுடரோனின் - கோடைக்காலத்தில் முழு
உற்சாகத்தோடு காய்கின்ற சூரியனைப் போல; ஒளி விம்மும் வானின் இடை
-
ஒளி மிகுகின்ற ஆகாயத்தில்; வீசிய இரும்பணை மரத்தால் - (அனுமன்)
வீசி எறிந்த மிகப் பெரிய மரங்களால்; தானவர்கள் மாளிகை - அரக்கரது
மாளிகைகள்; வான இடியால் ஒடியும் மால் வரைகள் மான -
ஆகாயத்திலிருந்து விழும் இடியினால் உடைந்த பெரிய மலைகளைப் போல்;
தகர்ந்து பொடியான -
இடிந்து பொடிபட்டன.

     மரங்களால்தாக்குண்டு விழுந்த அரக்கர் மாளிகைகளுக்கு, இடிகளால்
தாக்குண்டு அழியும் மலை ஒப்பு. உவமை அணி.                  (19)