5448. | எண் இல்தரு கோடிகள் எறிந்தன செறிந்தே, தண்ணென்மழைபோல் இடை தழைந்தது;சலத்தால், அண்ணல் அனுமான்,'அடல் இராவணனது, அந் நாள், விண்ணினும் ஓர்சோலை உளது ஆம்' என, விதித்தான். |
அந் நாள்எறிந்தன - அந்த காலத்தில்,(தான்) பிடுங்கி எறிந்தனவான;எண் இல் தரு கோடிகள் செறிந்து - அளவிறந்த மரங்களின் கூட்டங்கள்நெருங்கி; தண்ணென் மழை போல் - குளிர்ந்த மேகம் போல; இடைதழைந்தது - விண்ணிடத்தில் தழைந்து தோன்றியது; (அதனால்) அண்ணல்அனுமான் - பெருமை பொருந்திய அனுமான்; சலத்தால் - கோபத்தால்;அடல் இராவணனது - வலிமை மிக்க இராவணனுடைய; ஓர் சோலை -அசோகவனச் சோலை; விண்ணினும் உளது ஆம் என விதித்தான் -வானத்தும் உள்ளது என்று சொல்லும் படிச் செய்தான். கோடி - கூட்டம்:'சீவகோடிகள்' என்பது போல. இராவணனுக்கு வானத்திலும் ஒரு சோலை இருக்கிறது என எண்ணும்படியாக அசோகவனத்து மரங்களை அனுமன் விண்ணிலே சிதறி எறிந்தான் என்பது கருத்து. (20) |