5459.

பாடலம்படர் கோங்கொடும், பண் இசைப்
பாடல் அம் பனிவண்டொடும், பல் திரைப்
பாடு அலம்பு உயர்வேலையில் பாய்ந்தன,-
பாடு அலம் பெற,புள்இனம், பார்ப்பொடே.

     பார்ப்பொடு புள்இனம் - தமது குஞ்சுகளுடனே மரங்களில் இனிது
தங்கியிருந்த பறவைகளின் கூட்டம்; பாடு அலம் பெற - துன்பத்தை
மிகுதியாக அடைய; படர் கோங்கொடும் - உயர்ந்து வளர்ந்துள்ள கோங்கு
மரங்களும்; பாடலம் - பாதிரிமரங்களும்; பண் இடைப் பாடல் அம் பணி
வண்டொடும் -
சிறப்பித்துக் கூறப்பெறுகின்ற இசைப்பாடலைக் கொண்ட
அழகிய குளிர்ந்த வண்டுகளோடும்; பல் திசை பாடு அலம்பு உயர்
வேலையில் பாய்ந்தன -
பல அலைகள் கரைகளை வந்து தழுவி அலம்பும்
கடலிலே போய் விழுந்தன.

     இது யமக அணியாய்அமைந்தது.                          (31)