5460. | வண்டுஅலம்பு நல் ஆற்றின் மராமரம், வண்டல் அம்புனல் ஆற்றில் மடிந்தன; விண்டு அலம்புகம் நீங்கிய வெண் புனல், விண்தலம் புகநீள் மரம், வீழ்ந்தவே. |
வண்டு அலம்பு நல்ஆற்றின் மராமரம் - வண்டுகள் ஒலிக்கும்படியான, அழகிய சாலையிலிருந்த ஆச்சா மரங்கள்; வண்டல் அம்புனல் ஆற்றின் மடிந்தன - வண்டலைக் கொண்ட அழகிய நீர் நிறைந்த ஆற்றில் போய் விழுந்து அழுந்தின; விண் தலம் புக நீள் மரம் - வான் அளவு உயர்ந்து வளர்ந்த வேறு சில மரங்கள்; விண்டு அலம்பு கம் நீங்கிய வெண்புனல் வீழ்ந்த - திருமாலின் திருவடிகளைப் பிரம தேவன் கழுவியதனால் தோன்றி வானத்தினின்றும் பூமியை நோக்கி இறங்கி வந்த வெள்ளிய நீரை உடைய ஆகாச கங்கையாற்றிலே வீழ்ந்தன. விண்டு - விஷ்ணு;(திருமால்) கம் - ஆகாயம்; இதுவும் யமக அணி. வெண் புனல் - கங்கை; அதனால், 'ஆறு' என்பது காவிரியைக் குறிக்கிறது என்பாரும் உளர். இதுமுதல் (5460 - 5463) முடிய முன் இரண்டடிகளின் முதல் இரு சீர்கள் ஒருவகையாகவும் பின் இரண்டடிகளின் முதல் இரு சீர்கள் வேறுவகையாகவும் மடக்கி வந்து, யமக அணி பொருந்தப் பெற்றிருப்பது காண்க. (32) |