5465. | ஆனைத்தானமும், ஆடல் அரங்கமும், பானத் தானமும்,பாய் பரிப் பந்தியும், ஏனைத் தார் அணிதேரொடும் இற்றன- கானத்து ஆர் தருஅண்ணல் கடாவவே. |
அண்ணல் -பெரியோனான அனுமன்; கானத்து ஆர் தரு கடாவ - அசோகவனத்தில் நிறைந்துள்ள மரங்களை (வேரோடு பிடுங்கி) வீசி எறிய; ஆனை தானமும் ஆடல் அரங்கமும் - (அதனால்) யானைகளைக் கட்டியுள்ள இடங்களும் நடன சாலைகளும்; பானத் தானமும் - மதுபானம் செய்யும் இடங்களும்; பாய் பரிப் பந்தியும் - பாய்ந்து ஓடும் இயல்பினவான குதிரைகள் கட்டும் இடங்களும்; ஏனை தார் அணி தேரொடும் இற்றன - மற்றைய, சிறு மணிகள் கட்டப்பெற்ற தேரோடும் முறிந்து ஒழிந்தன. அரங்கம் -நடனசாலை. (37) |