சூரியன் தோற்றம்

5473.

உறு சுடர்ச்சூடைக் காசுக்கு அரசினை உயிர்
                             ஒப்பானுக்கு
அறிகுறியாகவிட்டாள்; ஆதலான், வறியள் அந்தோ !
செறி குழல்சீதைக்கு அன்று, ஓர் சிகாமணி
                             தெரிந்து வாங்கி,
எறி கடல் ஈவதுஎன்ன, எழுந்தனன், இரவி
                             என்பான்.

     உறு சுடர்ச் சூடைகாசுக்கு அரசினை - ஒளி பொருந்தியசூடாமணி
என்னும் அரச இரத்தினத்தை; உயிர் ஒப்பானுக்கு அறிகுறியாக விட்டாள் -
தன் உயிர் போன்ற நாயகனான இராமபிரானுக்கு, அடையாளப் பொருளாகக்
கொடுத்தனுப்பி விட்டாள்; ஆதலான் - ஆகையினால்; அந்தோ வறியள் -
ஐயோ, இப்போது ஒரு அணியும் இல்லாது வறியவளாக இருக்கின்றாள் (என்று);
அன்று -
அப்பொழுது; செறி குழல் சீதைக்கு - அடர்ந்த
 கூந்தலை
உடைய சீதாதேவிக்கு; ஓர் சிகாமணி தெரிந்து வாங்கி - தலையில்
அணிதற்கு உரிய மற்றொரு சூடாமணியை ஆராய்ந்து எடுத்து; எறிகடல்
ஈவது என்ன எழுந்தனன் இரவி என்பான் -
அலை எறியும் கடல்
கொண்டு வந்து கொடுப்பது போல சூரியன் தோன்றினான்.

     குடைக்காசுக்கரசு,சிகாமணி என்பன ஒரே பொருளன. இது தன்மைத்
தற்குறிப்பேற்ற அணி. சூரிய குலத்து அரசன் ஒருவனுக்கு வருணனால்
பரிசாகக் கொடுக்கப்பட்டது என்றும் அதனைத் தயரதன் மருமகள் சீதைக்கு
வழங்கினான் என்றும் கூறுவர். மாமனார் அளித்த சிறப்புடையது ஆதலின்,
பிற அணிகளை எறிந்ததுபோல் இதனை எறியாமல் பாதுகாத்தாள்..     (45)