அரக்கியர்வினாவும் பிராட்டி விடையும் 5475. | இன்னனநிகழும் வேலை, அரக்கியர் எழுந்து பொங்கி, பொன்மலை என்னநின்ற புனிதனைப் புகன்று நோக்கி, 'அன்னை ! ஈது என்னை மேனி ? யார்கொல் ?' என்று, அச்சம் உற்றார், நன்னுதல்தன்னைநோக்கி, 'அறிதியோ நங்கை ?' என்றார். |
இன்னன நிகழும்வேலை - இவ்வாறு அசோகவனம் அழிந்து கொண்டிருந்த போது; அரக்கியர் எழுந்து பொங்கி - (அங்கு உறங்கிக் கிடந்த) அரக்கிமார்கள் விழித்தெழுந்து மனம் கொதித்து; பொன் மலை என்ன நின்ற புனிதனை புகன்று நோக்கி - பொன்மயமான மேரு மலை போல் நின்ற தூயவனான அனுமனை விருப்பத்தோடு உற்றுப் பார்த்து; அன்னை ஈது என்ன மேனி - அம்மா ! இங்குத் தோன்றுவது என்ன வடிவம் ? யார் கொல் என்று அச்சம் உற்றார் - இவர் யாரோ என்று பயம்கொண்டவராகி; நன்னுதல் தன்னை நோக்கி - அழகிய நெற்றியை உடையபிராட்டியைப் பார்த்து; நங்கை அறிதியோ என்றார் - 'பெண்ணே ! (இவனைஇன்னான் என்று) அறிவாயோ' என்று வினாவினார்கள். அனுமன் திருமேனிபொன் நிறமாதலாலும், மலை போன்ற பெருமை உடைமையாலும், மேருமலை உவமையாயிற்று. இதற்கு முன்பு கடுஞ்சொற்களையே கூறிய அரக்கியர், இப்போது 'அன்னை' என்று இன்சொல் இட்டு அழைத்தது அச்சத்தாலும், வியப்பாலும், உண்மை அறியும் நோக்கினாலும் ஆகும். அனுமன் தோற்றம் அச்சமும் வியப்பும் ஊட்டியது; எனினும் உண்மைநிலை அறியவேண்டுமே என்னும் அடிமனத் தூண்டலால் விரும்பி நோக்கினர். 'புகற்சி விருப்பாகும்' என்பது தொல்காப்பியம். (47) |