அனுமன்சயித்தத்தைப் பெயர்த்து இலங்கைமேல் வீசுதல் 5481. | 'வெள்ளியங்கிரியை, பண்டு, வெந் தொழில் அரக்கன், வேரோடு அள்ளினன்'என்னக் கேட்டான்;அத் தொழிற்கு இழிவு தோன்ற, புள்ளி மா மேரு என்னும் பொன்மலை எடுப்பான் போல, வள் உகிர்த்தடக் கைதன்னால் மண்நின்றும் வாங்கி, அண்ணல், |
அண்ணல் -பெரியோனான அனுமன்; வெம் தொழில் அரக்கன் - கொடிய தொழிலை மேற் கொண்ட அரக்கனாகிய இராவணன்; பண்டு, வெள்ளி அம் கிரியை வேரோடு அள்ளினன் என்ன கேட்டான் - முற்காலத்தில், வெள்ளி மலையாகிய அழகிய கைலாசத்தை வேரோடு பறித் தெடுத்தான் என்று, (உலகோர் சொல்லக்) கேட்டவனாய்; அத் தொழிற்கு இழிவு தோன்ற - அந்தச் செயலுக்குக் குறைவு உண்டாகுமாறு; புள்ளி மாமேரு என்னும் பொன் மலை எடுப்பான் போல - பல நிறம் கொண்ட பெரிய மேரு எனப்படும் பொன் மலையை எடுப்பவன் போல; வள் உகிர் தடக்கை தன்னால் - கூர்மையான நகங்களை உடைய தனது பெரிய கைகளால்;மண் நின்றும் வாங்கி - தரையிலிருந்தும் (அந்தச் சயித்தத்தை - மண்டபத்தை) எளிதாகப் பெயர்த்தெடுத்து, இதுவும் அடுத்தகவியும் குளகமாகும். (53) |