5484.

அரி படுசீற்றத்தான்தன் அருகு சென்று, அடியின்
                                    வீழ்ந்தார்;
'கரி படு திசையின் நீண்ட காவலாய் ! காவல்
                                  ஆற்றோம் !
கிரி படு குவவுத் திண் தோள் குரங்கு இடை
                                 கிழித்து வீச,
எரி படுதுகிலின், நொய்தின் இற்றது கடி கா'
                                  என்றார்.

     அரி படுசீற்றத்தான் தன் அருகு சென்று அடியில் வீழ்ந்தார் -
சிங்கத்தினிடம் உண்டாகும் கோபத்தை உடைய இராவணன் பக்கம் சென்று
அவன் பாதங்களில் விழுந்த பருவத் தேவர், (அவனை நோக்கி); கரிபடு
திசையின் நீண்ட காவலாய் -
திக்கயங்கள் வாழ்கின்ற திக்குகளின் எல்லை
வரையிலும் நீண்டு பரந்த ஆட்சியை உடையோய்!;  காவல் ஆற்றோம் -
(இப்போது) சோலையைப் பாதுகாக்கும் ஆற்றல் இழந்தோம்; கிரி
படுகுவவுத்திண் தோள்குரங்கு - மலைபடுத்துப் போகும்படியான திரண்ட
வலிய தோள்களை உடைய ஒரு குரங்கு; இடை கிழித்து வீச  -
சோலையினிடையில் புகுந்து மரங்களை ஒடித்து வீசுதலினால்; கடிகா எரிபடு
துகிலின் நொய்தின் இற்றது -
காவல் மிக்க அச்சோலை நெருப்புப்பட்ட
ஆடை போல, விரைவில் அழிந்தது; என்றார் - என்று கூறினர்.

     'கிழித்து வீச'என்ற தொடர், மரங்களை ஒடித்தலும், மண்டபம் முதலிய
கட்டிடங்களை இடித்தலும் அனுமனுக்கு எளிய செயல் என்பதைப்
புலப்படுத்துகிறது. 'நெருப்பில்பட்ட துகில்' - விரைவில் அழிவதற்கு உவமை.
கடிகா - காவல் சோலை.                                    (56)