இராவணன் இகழ்தலும்காவலர் அனுமனைப் புகழ்தலும் 5486. | 'ஆடகத் தருவின் சோலை பொடி படுத்து, அரக்கர் காக்கும் தேட அரு வேரம்வாங்கி, இலங்கையும், சிதைத்தது அம்மா ! கோடரம் ஒன்றே! நன்று இது ! இராக்கதர் கொற்றம் ! சொற்றல் மூடரும்மொழியார்' என்ன மன்னனும் முறுவல் செய்தான். |
கோடரம் ஒன்றே- (இவ்வாறு சொல்லக் கேட்ட இராவணன்) குரங்கு ஒன்றே; ஆடகத் தருவின் சோலை - பொன்மயமான மரங்களை உடைய சோலையை; பொடிபடுத்து - தூளாகும் படி அழித்து; அரக்கர் காக்கும் தேட அரும் வேரம் வாங்கி - அரக்கர்கள் காவல் புரியும் எங்கும் தேடிக் காண்பதற்கு அரிய சயித்தத்தைப் பறித்து; இலங்கையும் சிதைத்தது - இலங்கையையும் அழித்து விட்டது; இராக்கதர் கொற்றம் நன்று - அரக்கர்களுடைய வீரம் நன்றாக இருக்கின்றது; இது சொற்றல் மூடரும் மொழியார் என்ன - இவ்வாறான பேச்சை அறிவீனரும் சொல்லமாட்டார்கள் என்று; மன்னனும் முறுவல் செய்தான் - அரக்கர்க்கு அரசனான இராவணனும் புன் சிரிப்புக் கொண்டான். மன்னன் முறுவல்செய்தது; எள்ளற் குறிப்பு. பருவத் தேவர்களின் பேச்சை நம்பவில்லை இராவணன் என்பதை அவன் முறுவல் காட்டுகின்றது. கோடரம் - குரங்கு. (58) |