5498.

வெய்துறுபடையின் மின்னர்; வில்லினர்; வீசு காலர்;
மையுறு விசும்பின்தோன்றும் மேனியர்; மடிக்கும்
                              வாயர்;
கை பரந்து உலகுபொங்கிக் கடையுகம்
                             முடியும்காலை,
பெய்ய என்றுஎழுந்த மாரிக்கு உவமை சால்
                             பெருமை பெற்றார்.

     மடிக்கும் வாயர்- (கோபத்தால்) மடிக்கின்ற உதட்டை
உடையவர்களாகிய அந்த அரக்கர்கள்; வெய்து உறு படையின் மின்னர் -
கொடுமை மிகுந்த ஆயுதங்களான மின்னலை உடையவர்களாய்; வில்லினர்,
வீசு காலர் -
விற்களை உடையவர்களாய், வீசுகின்ற மூச்சுக் காற்றை
உடையவர்களாய்; மை உறு விசும்பின் தோன்றும் மேனியர் - மேகம்
பொருந்திய வானம் போன்ற கரிய உடம்பை உடையவர்களாய்; கைபரந்து,
உலகு பொங்கி கடையுகம் முடியும் காலை -
பக்கங்களில் பரவி, உலகின்
மீது (கடல்கள்) பெருக்கெடுத்து யுகங்கள் முடியும் காலத்தில்; பெய்ய என்று
எழுந்த மாரிக்கு -
பெரு மழைபெய்வதற்கு மேற்கிளம்பிய மேகத்துக்கு;
உவமை சால் பெருமை பெற்றார் - உவமையாதற்கு ஏற்ற பெருமையைப்
பெற்றவர்களாய் விளங்கினர்.

     அந்த அரக்கவீரர் பிரளய காலத்தில் வானத்துத் தோன்றும் மேகக்
கூட்டத்தை ஒத்தனர் என்பதாம்.                                (10)