5502. | வாள் உறைவிதிர்க்கின்றாரும், வாயினை மடிக்கின்றாரும், தோள் உறத்தட்டிக் கல்லைத் துகள்படத் துகைக்கின்றாரும், தாள் பெயர்த்துஇடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும், கோள் வளை எயிறுதின்று தீ எனக் கொதிக்கின்றாரும், |
வாள் உறைவிதிர்க் கின்றாரும் - வாளை உறையினின்றும்எடுத்து அசைக்கின்றவர்களும்; வாயினை மடிக்கின்றாரும் - (கோபத்தால்) தம் வாயிதழ்களை மடிக்கின்றவர்களும்; தோள் உற தட்டி - (தம் வீரத்தைக்காட்ட, கைகளால்) தோள்களை நன்றாகத் தட்டிக் கொண்டு; கல்லை துகள் படத் துகைக்கின்றாரும் - (வழியிற் பட்ட) பெருங்கற்களையும் தூளாகப் போகும்படி நொறுக்குகின்றவர்களும்; தாள் பெயர்த்து இடம் பெறாது தருக்கினர் நெருக்குவாரும் - தம் கால்களை (நடக்க) பெயர்த்து மேலே அடி வைப்பதற்கு இடம் கிடைக்காமல் செருக்குகின்றவர்களும்; கோள் வளை எயிறு - வலிய வளைவான தம் பற்களைக்; தின்று தீ எனக் - கடித்து நெருப்பை போலக்; கொதிக்கின்றாரும்- கொதித்து எழுகின்றவர்களும் (ஆயினர்). (14) |