அறுசீர்ஆசிரிய விருத்தம்
                      (வேறுவகை)

5503.

அனைவரும், மலை என நின்றார்; அளவு அறு
                        படைகள் பயின்றார்;
அனைவரும், அமரின் உயர்ந்தார்; அகலிடம் நெளிய
                        நடந்தார்;
அனைவரும், வரனின் அமைந்தார்; அசனியின்
                       அணிகள் அணிந்தார்;
அனைவரும், அமரரைவென்றார்; அசுரரை உயிரை
                       அயின்றார்

     அனைவரும் மலைஎனநின்றார் - கிங்கர வீரர்யாவரும், மலையைப்
போல சலியாது நிற்பவர்கள்; அளவு அறுபடைகள் பயின்றார் - மிகப் பல
படைக்கலப் பயிற்சி பெற்றவர்கள்; அனைவரும் அமரின் உயர்ந்தார் -
யாவரும் போர் செய்வதில் சிறந்தவர்கள்; அனைவரும் வரனின் அமைந்தார்
-
யாவரும் வர பலம் பொருந்தப் பெற்றவர்கள்; அசனியின் அணிகள்
அணிந்தார் -
வச்சிராயுதம் போல் ஒளி வீசும் ஆபரணங்களை
அணிந்தவர்கள்;  அனைவரும் அமரரை வென்றார் - யாவரும்
தேவர்களைப் போரில் வென்றவர்கள்; அசுரரை உயிரை அயின்றார் -
அசுரர்களது உயிரைக் கொன்று தின்றவர்கள் (இத்தகையவர்கள்); அகலிடம்
நெளிய நடந்தார் -
(பாரமிகுதியால்) பூமி நெளியும்படி, (அனுமான் உள்ள
இடம் நோக்கி) நடந்தார்கள்.

     அரக்க வீரர்ஒவ்வொருவரும், மலை என நிற்றல் முதலியன
பெற்றவராகையால், அனைவரும் என்பது பன்முறை கூறப்பட்டது. இந்தக்
கிங்கர வீரர் தேவர்களையும் மற்ற அசுரர்களையும் வென்ற செய்தி 5493, 5495
ஆம் பாடல்களில் குறிக்கப்பட்டது. அசனி - வச்சிராயுதம். 'அசனி
வச்சிரப்படையாகும் மே' - பிங்கலந்தை.                       (15)