அரக்க வீரர்களின்வருகை கண்டு அனுமன் மகிழ்தல். 5508. | வயிர்ஒலி, வளை ஒலி, வன் கார் மழை ஒலி முரசு ஒலி, மண்பால் உயிர் உலைவுறநிமிரும் போர் உறும் ஒலி, செவியின் உணர்ந்தான்; வெயில் விரிகதிரவனும் போய் வெருவிட, வெளியிடை, விண் தோய் கயிலையின்மலைஎன நின்றான்; அனையவர் வரு தொழில் கண்டான். |
வெயில் விரிகதிரவனும் போய் வெரு விட - வெயிலை வீசுகின்ற சூரியனும் அஞ்சி விலகிப் போய்விட; விண் தோய் கயிலையின் மலை என - ஆகாயத்தை எட்டிய கயிலை மலை போல; வெளியிடை நின்றான் - திறந்த வெளியிடத்தி்ல் நின்றவனாகிய அனுமன்; வயிர் ஒலி வளை ஒலி - ஊது கொம்பின் ஓசையும் சங்கின் ஓசையும்; வல் கார் மழை ஒலி - வலிய கார் காலத்து மேக ஒலி போன்ற; முரசு ஒலி - முரசங்களின் முழக்கமும்; மண்பால் உயிர் - பூமியில் உள்ள பிராணிகள்; உலை வுற - நடுக்கம் அடைய; நிமிரும் போர் உறும் ஒலி - ஓங்கும் போர் வருவதைக் குறிக்கும் ஒலியும்; செவியின் உணர்ந்தான் - காதினால் கேட்டு உணர்ந்தவனாகி; அனையவர் வரு தொழில் கண்டான் - அந்த அரக்கர் வருவதைக் கண்ணால் நேரிலும் கண்டான். வெயில் விரி கதிரவன்வெருவியது; அனுமன் சிறு குழந்தையாக இருந்த போது, தன்னைப் பற்ற வந்ததை எண்ணி மீண்டும் வருவானோ என்ற நினைவு. (20) |