அரக்கர், படைகளை ஏவ அனுமன் ஒரு மரத்தால்எதிர்த்தல்

5510.

'இவன்  ! இவன் ! இவன் !' என நின்றார்; 'இது !'
                 என, முதலி எதிர்ந்தார்;-
பவனனின் முடுகிநடந்தார், பகல் இரவு உற
                             மிடைகின்றார்-
புவனியும், மலையும், விசும்பும், பொரு அரு நகரும்,
                            உடன் போர்த்
துவனியில் அதிர,விடம்போல் சுடர் விடு படைகள்
                            துரந்தார்.

     பவனனின் முடுகி்நடந்தார் - காற்றை விட விரைவாகநடந்து வந்த
அரக்கர்கள்; பகல் இரவு உறமிடை கின்றார் - பகற்காலத்திலேயே இரவு
போல இருளாகும் படி நெருங்கி; இவன் இவன் இவன் என நின்றார் -
இவன்தான் இவன்தான் இவன் என்று குறிப்பித்துக் காட்டுபவர்களாய்; இது
என முதலி எதிர்ந்தார் -
இதுவே அந்தக் குரங்கு என்று சொல்லி, முற்பட்டு
எதிர்ப்பவர்களாகி; புவனியும் மலையும் விசும்பும் பொருவரு நகரும் -
பூமியும் மலையும், ஆகாயமும், ஒப்பில்லாத இலங்கை நகரமும்; உடன்
போர்த் துவனியில் அதிர -
ஒரு சேரப் போர் முழக்கத்தினால் நடுங்கும்
படியாக; விடம் போல் சுடர் விடு படைகள் துரந்தார் - ஆலகாலம்
போல்கொடுமையை உடைய ஒளி விடுகின்ற ஆயுதங்களை (அனுமன் மேல்)
வீசினார்கள்.

    முடுகி நடந்தார்,துரந்தார் என முடிந்தது. இவன் இவன் இவன் என்ற
அடுக்கு, விரைவுப் பொருளையும் வெகுளிப் பொருளையும் தருவது.     (22)