5513.

பரு வரைபுரைவன வன் தோள், பனிமலை அருவி
                                 நெடுங் கால்
சொரிவன பல என,மண் தோய் துறை பொரு
                           குருதி சொரிந்தார்;
ஒருவரை ஒருவர்தொடர்ந்தார்; உயர் தலை உடைய
                           உருண்டார்-
அரு வரை நெரியவிழும் பேர் அசனியும் அசைய
                           அறைந்தான்.

     அரு வரை நெரியவிழும் பேர் அசனி்யும் அசைய அறைந்தான் -
(அனுமன்)பெரிய மலைகள் நெரிந்து தூளாகுமாறு, விழுகின்ற பெரிய
இடிகளும், அவ்வோசையில் குலைந்து போக, அம் மரத்தைக் கொண்டு
அரக்கர்களை ஓங்கி அடித்தான்; (அதனால்) பனிமலை அருவி நெடும் கால்
பல சொரிவன என -
குளிர்ந்த மலைகள் அருவியாக  நீண்ட வாய்க்கால்
பலவற்றைச் சொரிவன
 போல; பருவரைபுரைவன வன் தோள் - பெரிய
மலை போல்வனவாகிய வலிய தோள்களினால்; மண்தோய் துறை பொரு
குருதி சொரிந்தார் -
மண்ணிலே விழும் படியாக ஆறு போல இரத்தத்தைக்
கொட்டியவர்களாய்; ஒருவரை ஒருவர் தொடர்ந்தார் - ஒருத்தரை ஒருத்தர்
பற்றிக் கொண்டு; உயர்தலை உடைய உருண்டார் - உயர்ந்த தமது
தலைகள் உடைபட்டுப் போக உருண்டோடி அழிந்தனர்.

     அரக்கர்தோள்களுக்குப் பெரிய மலைகளும், அவர்கள்
தோள்களிலிருந்து சொரிந்த இரத்த வெள்ளங்களுக்கு மலைகளிலிருந்து வரும்
அருவி நீர்க்கால்களும் உவமைகளாயின.                          (25)