5514.

பறை புரைவிழிகள் பறிந்தார்; படியிடை நெடிது
                           படிந்தார்;
பிறை புரை எயிறும் இழந்தார்;
பிடரொடு தலைகள்
                           பிளந்தார்;
குறை உயிர் சிதறநெரிந்தார்; குடரொடு குருதி
                           குழைந்தார்;-
முறை முறை படைகள்எறிந்தார்-முடை உடல் மறிய
                           முறிந்தார்.

     முறை முறை படைகள்எறிந்தார் - (அவ்வரக்கர்கள்)வரிசை
வரிசையாக நின்று (அனுமன் மேல்) ஆயுதங்களை வீசினர்; பறை புரை
விழிகள் பறிந்தார் -
(அனுமன் மரங்கொண்டுதாக்கியதனால்) அவர்களில்
சிலர் தோற்பறை போன்று அகன்ற கண்கள் பறிக்கப்பட்டவராயினர்; படியிடை
நெடிது படிந்தார் -
சிலர், தரையின் மீது நீள விழுவாராயினர்; பிறை புரை
எயிறும் இழந்தார் -
பிறைச்சந்திரன் போன்று வளைந்த தமது பற்களை
இழந்தவராயினர் சிலர்; பிடரொடு தலைகள் பிளந்தார் - சிலர், பின்
கழுத்தும் தலைகளும் பிளக்கப்பட்டவராயினர்; குறை உயிர் சிதற நெரிந்தார்
-
சிலர், தமது குற்றுயிரும் சிதறிப் போகும்படி மிதிபட்டு அழிந்தார்; குடரொடு
குருதி குழைந்தார் -
சிலர் தமது குடலோடு இரத்தத்தையும் வெளியே
சொரிந்து அழிந்தனர்; முடை உடல் மறிய முறிந்தார் - சிலர் முடை
நாற்றமுள்ள தமது உடம்புகள் அழியும்படி முறியப் பெற்றார்கள்.

     வட்டமாயும்பெரியவையாயும் இருத்தலால் தோற்பறை அரக்கர்
கண்களுக்கு உவமை.                                         (26)