5517. | அயல்,அயல், மலையொடு அறைந்தான்; அடு பகை அளகை அடைந்தார்; வியல் இடம்மறைய விரிந்தார்; மிசை உலகு அடைய மிடைந்தார்; புயல் தொடுகடலின் விழுந்தார்; புடை புடை சிதைவொடு சென்றார், உயர்வுறவிசையின் எறிந்தான்; உடலொடும் உலகு துறந்தார். |
அயல் அயல்மலையொடு அறைந்தான் - (அனுமன் அவ்வரக்கர்களை) பக்கங்களில் உள்ள மலைகளில் ஓங்கி அடித்தான்; அடு பகை அளகை அடைந்தார் - (அதனால் சிலர்) கொல்லவல்ல பகைமை உடைய அளகா பட்டணத்தை அடைந்தார்கள்; வியல் இடம் மறைய விரிந்தார் - (வேறு சிலர்) ஆகாயம் மறைந்து போகும்படி பரவினார்கள்; மிசை உலகு அடைய மிடைந்தார் - (இன்னும் சிலர்) மேலுலகம் முழுவதும் செறிந்து காணப்பட்டனர்; புடை புடை சிதைவொடு சென்றார் - சிலர், நாற் புறங்களிலும் உடல் சிதைய ஓடினார்கள்; உயர்வுற விடையின் எறிந்தான் - மற்றும் சிலரை மேலே போகுமாறு வேகமாக வீசினான்; உடலொடும் உலகு துறந்தார் - (அதனால் அவர்கள்) உடம்புகளுடன் இந்த உலகத்தை நீத்து விண்ணுலகு எய்தினார்கள். (29) |