5525. | முட்டினார்பட, முட்டினான்; முறை முறை முடுகிக் கிட்டினார் பட,கிட்டினான்; கிரி என நெருங்கிக் கட்டினார் பட,கட்டினான்; கைகளால் மெய்யில் தட்டினார் பட,தட்டினான்-மலை எனத் தகுவான். |
மலை எனத்தகுவான் - மலை எனச்சொல்லத்தக்கவனாய (பேருருவம் பெற்ற) அனுமன்; முட்டினார் பட முட்டினான் - தன்னை முட்டின அரக்கர் இறக்கும்படி (தான் அவரை) முட்டினான்; முறை முறை முடுகி கிட்டினார் பட கிட்டினான் - வரிசை வரிசையாகத் தன்னை நெருங்கின அரக்கர்கள் அழியுமாறு தானும் அவர்களைநெருக்கினான்; கிரி என நெருங்கி கட்டினார் பட கட்டினான் - மலை போன்றவர்களாய் நெருங்கி வந்து (தமது கைகளால் தன்னைக்) கட்டியவர்கள் இறக்குமாறு, தான் அவர்களை இறுகக் கட்டினான்;கைகளால் மெய்யில் தட்டினார் பட தட்டினான் - தம் கைகளால் (தனது) உடம்பில் தட்டினவர்கள் இறக்கும்படி (தான் அவர்களைத்) தட்டினான். தன்னைக் கொல்லவந்தவர்களை அவர்கள் செய்த வண்ணமே தானும் செய்து அவர்களைக் கொன்றான் அனுமன். (37) |