5526. | உறக்கினும்கொல்லும்; உணரினும் கொல்லும்; மால் விசும்பில் பறக்கினும்கொல்லும்; படரினும் கொல்லும்; மின் படைக் கை, நிறக் கருங்கழல், அரக்கர்கள் நெறிதொறும் பொறிகள் பி்றக்க நின்றுஎறி படைகளைத் தடக் கையால் பியையும். |
உறக்கினும்கொல்லும் - அரக்கர் சோர்வுற்றநிலையிலும் அனுமன் அவர்களைக் கொல்வான்; உணரினும் கொல்லும் - நல்லுணர்வு பெற்ற நிலையிலும் அரக்கர்களைக் கொல்வான்; மால் விசும்பில் பறக்கினும் கொல்லும் - பெரிய ஆகாயத்தில் அரக்கர்கள் பறந்தாலும் அவர்களைக் கொல்லுவான்; படரினும் கொல்லும் - தரையில் நடந்து சென்றாலும் அவர்களைக் கொல்வான்; மின் படைக்கை நிறக் கருங் கழல் அரக்கர் - மின்னலை உண்டாக்கும் படை உடைய கையைப் பெற்ற நிறமுடைய வலிய வீரக்கழல் அணிந்த அரக்கர்கள்; நெறிதொறும் - வழிகளில் எல்லாம்; பொறிகள் பி்றக்க - தீப் பொறிகள் தோன்ற; நின்று எறிபடைகளை - நின்றுவீசி எறியும் ஆயுதங்களை; தடக்கையால் பியையும் - அனுமன் தனது பெரிய கைகளால் பிசைந்து நொறுக்குவான். பிறங்க -தோன்ற; எதுகை நோக்கி வலிந்தது; 'பிறக்க' என ஆயிற்று. 'விளங்க' என்றும் பொருள் கொள்ளலாம். பியைதல் - பிசைதல். (38) |