5533. | ஊன் எலாம்உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான்;- தான்,எலாரையும், மாருதி சாடுகை தவிரான்;- மீன் எலாம்உயிர்; மேகம் எலாம் உயிர்; மேல் மேல் வான் எலாம்உயிர்; மற்றும் எலாம் உயிர்-சுற்றி. |
மாருதி தான்எலாரையும் சாடுகை தவிரான் - அனுமன் தான் ஒருத்தனாகவே, எதிர்ப்பட்ட அரக்கர் யாவரையும் கொல்லுதலினின்றும் நீங்கானல்லன்; (அதனால்) ஊன் எலாம் உயிர் கவர்வுறும் காலன் ஓய்ந்து உலந்தான் - உடம்புகளிலிருந்து உயிர்களைக் கவர்ந்து செல்ல வேண்டிய எமன் (மாள்பவர் பலராகி விட்டதால், தனது தொழிலைச் செய்ய இயலாதவனாய்) தளர்ந்து வலிமை கெட்டான்; சுற்றி - (எடுத்துக் கொண்டு போவார் எவரும் இன்மையின் அவ்வரக்கர் உயிர்) எங்கும் சுழன்று; மீன் எலாம் உயிர் - நட்சத்திர மண்டலம் முழுவதும் உயிராகவும்; மேகம் எலாம் உயிர் - மேகமண்டலங்களில் எல்லாம் உயிராகவும்; மேல் மேல் வான் எலாம் உயிர் - மற்றும் உள்ள இடைவெளிகளில் எல்லாம் உயிராகவும் நிரம்பிக் கிடந்தன. முன் கவிதையில்உடல்கள், இக் கவிதையில் உயிர்கள் சிதறியமை கூறப்பட்டன. (45) |