அரக்கர்கள்நடுவில் அனுமன் காட்சி 5534. | ஆக இச்செரு விளைவுறும் அமைதியின், அரக்கர் மோகம் உற்றனர்ஆம் என, முறை முறை முனிந்தார்; மாகம் முற்றவும்,மாதிரம் முற்றவும், வளைந்தார், மேகம்ஒத்தனர்-மாருதி வெய்யவன் ஒத்தான். |
ஆக இச்செருவிளைவுறும் அமைதியில் - இவ்வாறு, இப்போர் நடக்கும் சமயத்தில்; அரக்கர் மோகம் உற்றனர் ஆம் என - சில அரக்கர்கள் அறிவு மயக்கம் கொண்டவர்கள் போல; முறை முறை முனிந்தார் - மேன் மேலும் கோபம் கொண்டவர்களாகி; மாகம் முற்றவும் - வானிடம் முழுவதும்; மாதிரம் முற்றவும் வளைந்தார் - திக்குகள் முழுவதும் சூழ்ந்து கொண்டவராய்; மேகம் ஒத்தனர் - கரிய மேகம் போல விளங்கினர்; மாருதி வெய்யவன் ஒத்தான் - அனுமன் சூரியனைப் போன்று விளங்கினான். பலபடியாகச்சிதறுண்டு போன அரக்கர்கள், இச்சமயத்தில் சினம் கொண்டு சூழ்வது அவர்களது அறிவின்மையின் செயல். இதை 'மோகம் உற்றனர்' என்ற தொடர்காட்டுகிறது. மாகம் - வான்; மாதிரம் - திக்கு. (திசை) (46) |