5535.அடல்அரக்கரும், ஆர்த்தலின், அலைத்தலி்ன் அயரப்
புடை பெருத்து உயர் பெருமையின், கருமையின்
                                  பொலிவின்
மிடல் அயில்படை மீன் என விலங்கலின், கலங்கும்
கடல்நிகர்த்தனர்-மாருதி மந்தரம் கடுத்தான்.

     அடல் அரக்கரும்- வலிமைமிக்க அந்த அரக்கர்களும்;
ஆர்த்தலின், அலைத்தலின் -
இரைதலாலும்; (அனுமனால் இங்கும் அங்கும்)
அலைக்கப்படுவதாலும்; அயர புடை பெருத்து உயர் பெருமையின் -
(கண்டவர்) சோரும்படி பக்கங்கள் பருத்து உயர்ந்து தோன்றுகின்ற
பெருந்தோற்றத்தாலும்; கருமையின் பொலிவின்  - கருநிறத்தாலும்,
மிகுதியாய் (நிறைந்து) காணப்படுவதாலும்; மிடல் அயில்படை மீன் என
விலங்கலின் -
அவர்கள் கொண்டுள்ள வலிய வேல்படைகள் மீன்கள்
போன்று விளங்குவதனாலும்; கலங்கும் கடல் நிகர்த்தனர் - (கடையும்
போது) கொந்தளிக்கும் கடலுக்கு ஒப்பாக விளங்கினர்; மாருதி மந்தரம்
கடுத்தான்  -
அனுமன், (கடலைக்கலக்கும்) மந்தரமலையை ஒத்தான்.

     ஆர்த்தல்,அலைதல், பெருந் தோற்றம், கருமை, மீன் விலங்குதல்
அரக்கர்க்கும் கடலுக்கும் பொருந்தும் பொதுத்தன்மைகள்.             (47)