5536.

கரதலத்தினும் காலினும் வாலினும் கதுவ,
நிரை மணித் தலைநெரிந்து உக, சாய்ந்து உயிர்
                                  நீப்பார்,
சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள்,
                               தொடரும்
உரகர் ஒத்தனர்- அனுமனும் கலுழனே ஒத்தான்.

     கரதலத்தினும்,காலினும் வாலினும் கதுவ - அனுமன்  தனது
கைகளாலும், கால்களாலும், வாலினாலும் பற்றுதலினால்; நிரைமணித்தலை
நெரிந்து உக சாய்ந்து உயிர் நீப்பார் -
வரிசையாகக் கரிய நிறமுள்ள தமது
தலைகள் நசுங்கிச் சிதறுதலினால் மண்மீது விழுந்து உயிர்விடுகின்ற
கிங்கரர்கள்; சுரர் நடுக்குற அமுது கொண்டு எழுந்த நாள் -  தேவர்கள்
அஞ்சும்படி, அமுத கலசத்தை எடுத்துக் கொண்டு மேலே கிளம்பும் பொழுது;
தொடரும் உரகர் ஒத்தனர் -
(காவலிருந்து கவர வொட்டாது தடுக்கத்)
தொடர்ந்த பாம்புகளை ஒத்தனர்; அனுமனும் கலுழனே ஒத்தான் -
அனுமனும், (அமுதத்தோடு எழுந்த) கருடனை ஒத்திருந்தான்.        (48)