5537. | மானம்உற்ற தம் பகையினால், முனிவுற்று வளைந்த மீனுடைக் கடல்உலகினின், உள எலாம் மிடைந்த ஊன் அறக்கொன்று துகைக்கவும், ஒழிவு இலா நிருதர் ஆனைஒத்தனர்-ஆள் அரி ஒத்தனன் அனுமன். |
மானம் உற்ற தம்பகையினால் முனிவுற்று வளைந்த - செருக்குக் கொண்ட தமது பகைமைக் குணத்தினாலே, கோபம் கொண்டு (அனுமனைச்) சூழ்ந்து கொண்டவரும்; மீன் உடைக்கடல் உலகினின் உள எலாம் மிடைந்து - மீன்களை உடைய கடலினால் சூழப்பட்ட இலங்கையிலே உள்ள இடம் முழுவதும் நெருங்கியிருப்பவரும்; ஊன் அற கொன்று துகைக்கவும் ஒழிவு இலா நிருதர் - (கண்ணில் கண்டவர்) உடம்புகளை எல்லாம் அழித் தொழிக்கவும் அழிந்திடாமல் பெருகித் தோன்றுபவருமான அரக்கர்கள்; ஆனை ஒத்தனர் - யானைகளைப் போன்றவரானார்கள்; அனுமன் ஆள் அரி ஒத்தான் - அனுமன் (மிருகங்களை) ஆளும் தன்மை உள்ள சிங்கத்தை ஒத்தவனானான். அரக்கர்களுக்குயானைத் திரளும், அனுமனுக்கு, சிங்கமும் உவமைகளாக வந்தன. (49) |