கிங்கரர்மடிந்ததைக் காவலர் இராவணனுக்குத் தெரிவித்தல்

 5543.

வந்தகிங்கரர் 'ஏ' எனும் மாத்திரை மடிந்தார்;
நந்தவானத்துநாயகர் ஓடினர், நடுங்கி,
பிந்து காலினர்,கையினர், பெரும் பயம் பிடரின்
உந்த, ஆயிரம்பிணக் குவைமேல் விழுந்து
                               உளைவார்.

     வந்த கிங்கரர்- அனுமனுடன் போரிட வந்த கிங்கரர்களான
அரக்கர்கள்; 'ஏ' எனும் மாத்திரை மடிந்தார் - இரண்டு மாத்திரைக்கால
அளவில் இறந்தார்கள்; நந்தவானத்து நாயகர் ஓடினர் - (உடனே)
நந்தவனத்துப் பாதுகாவலர் விரைந்து செல்பவராய்; நடுங்கி, பிந்து காலினர்
கையினர் -
நடுங்கிப் பின் வாங்குகின்ற கால் கை உடையவர்களாய்; பெரும்
பயம் பிடரின் உந்த -
மிக்க அச்சம் கழுத்தைப் பிடித்துத்தள்ள; ஆயிரம்
பிணக்குவை  மேல் விழுந்து -
 ஆயிரக்கணக்கான பிணக்குவியலின் மேல்
விழுந்து; உளைவார் - வருந்துவார்.                            (55)