5544. | விரைவின்உற்றனர்; விம்மலுற்று யாது ஒன்றும் விளம்பார்; கரதலத்தினால்,பட்டதும், கட்டுரைக்கின்றார்; தரையில்நிற்கிலர்; திசைதொறும் நோக்கினர்; சலிப்பார்; அரசன், மற்றவர்அலக்கணே உரைத்திட, அறிந்தான். |
விரைவின்உற்றனர் - இராவணன் முன்னேவிரைவாகப் போய்ச் சேர்ந்த அவர்கள்; விம்மல் உற்று - ஏங்கிய வண்ணமாய்; யாது ஒன்றும் விளம் பார் - யாதொன்றையும் (வாயினால்) சொல்ல மாட்டாமல்; பட்டதும் -அங்கு நேர்ந்த எல்லாவற்றையும்; கரதலத்தினால் கட்டுரைக் கின்றார் - தங்கள் கைகளின் சைகைகளால் குறிப்பித்துக் காட்டி; தரையில் நிற்கிலர் - தரையில் நிற்க மாட்டாமல்; திசை தொறும் நோக்கினர் சலிப்பார் - நான்கு திக்குகளையும் பார்த்து நடுங்கினார்கள்; அரசன் அவர் அலக்கணே உரைத்திட அறிந்தான் - அரக்கர் அரசனான இராவணன், அவர்கள் படுகின்ற வருத்தமே (அங்கு நேர்ந்த படுதோல்வியைத்) தெரிவிக்க உணர்ந்தான். கரதலத்தினால்கட்டுரைக் கின்றார் என்றது. அங்கு நடந்த அக்கிங்கரர் அழிவைச் சொல்ல அச்சத்தால் நாவெழாததைக் காட்டுகின்றது. சொல்லாடாமல் மெய்ப்பாடுகளாலேயே செய்தி உணர்த்தும் சாதனையைச் செய்யுளிலும் செய்துகாட்டுகிறார், கவிச்சக்கரவர்த்தி. (56) |