5545. | 'இறந்து நீங்கினரோ ? இன்று, என் ஆணையை இகழ்ந்து துறந்துநீங்கினரோ ? அன்றி, வெஞ் சமர் தொலைந்தார் மறந்துநீங்கினரோ ? என்கொல் வந்தது ?' என்று உரைத்தான்- நிறம் செருக்குற,வாய்தொறும் நெருப்பு உமிழ்கின்றான். |
நிறம் செருக்குஉற வாய் தொறும் நெருப்பு உமிழ்கின்றான் - மார்பைஅகந்தையால் நிமிர்த்த வண்ணம் பத்து வாய்களிலும் சினத்தீயைக் கக்குபவனான இராவணன்; இன்று இறந்து நீங்கினரோ ? - (செய்தி சொல்ல வந்த காவலர்களைப் பார்த்து) இன்று, எனது ஏவலை மேற்கொண்ட கிங்கரர்கள் போரில் தமது உயிரைப் பலிகொடுத்து ஒழிந்தார்களோ ?; என் ஆணையை இகழ்ந்து துறந்து நீங்கினரோ ? - (அல்லது) நான் இட்ட கட்டளையைக் கடந்தவராய் போர் செய்வதை விட்டுச் சென்றார்களோ; அன்றி - அதுவல்லாமல்; வெம்சமர் தொலைந்தார் - கொடிய போரில் தோல்வி உற்றவராய்; மறந்து நீங்கினரோ ? - (அவமானம் தாங்காமல்) என்னையும் மறந்து போய் விட்டார்களோ ?; என் கொல் வந்தது என்று உரைத்தான் - நீங்கள் வந்த காரணம் என்ன ? என்று கேட்டான். (57) |