5548. | மீட்டுஅவர் உரைத்திலர்;பயத்தின் விம்முவார்; தோட்டு அலர் இனமலர்த் தொங்கல் மோலியான், 'வீட்டியது அரக்கரை என்னும் வெவ் உரை, கேட்டதோ ?கண்டதோ ? கிளத்துவீர்' என்றான். |
அவர் மீட்டுஉரைத்திலர் - அந்த வனத்து நாயகர்,மறுமொழி கூறாதவர்களாய்; பயத்தின் விம்முவார் - அச்சத்தினால் நடுங்குபவரானார்கள்; தோடு அலர் இனம் மலர் தொங்கல் மோலியான் - இதழ்களோடு விரிந்த பலவகை மலர்களால் தொடுத்த மாலையணிந்த முடிகளை உடைய இராவணன்; அரக்கரை வீட்டியது என்னும் வெவ் உரை - (அந்தக் குரங்கு) அரக்க வீரரைக் கொன்று விட்டது என்ற கொடிய வார்த்தை; கேட்டதோ ? கண்டதோ ? கிளத்துவீர் என்றான் - நீங்கள் கேட்டுச் சொன்னதா ? அன்றி, பார்த்துச் சொன்னதா ? சொல்லுங்கள் என்று மீட்டும் கேட்டான். (60) |