5559. | ஆயிரம்ஐந்தொடு ஐந்து ஆம், ஆழி அம் தடந் தேர்; அத் தேர்க்கு ஏயின இரட்டியானை; யானையின் இரட்டி பாய் மா; போயின பதாதி,சொன்ன புரவியின் இரட்டி போலாம்- தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை. |
தீயவன் தடந்தேர் சுற்றித் தெற்று எனச் சென்ற சேனை - கொடியவனான சம்புமாலியினது பெரிய தேரைச் சூழ்ந்து விரைவாகச் சென்ற அரக்கர் படையில்; ஆழி அம் தடம் தேர் - சக்கரங்களை உடைய அழகிய பெரிய தேர்கள்; ஐந்தொடு ஐந்து ஆயிரம் ஆம் - பத்தாயிரமாகும்; ஏயின யானை - அங்குப் பொருந்திய யானைகளின் அளவு; அத்தேர்க்கு இரட்டி - அத் தேர்த் தொகைக்கு இரட்டிப் புள்ளதாகும்; (இருபதினாயிரம்) பாய் மா - பாயும் குதிரைகள்; யானையின் இரட்டி - யானைத் தொகையினும் இரு மடங்காகும்; (நாற்பதினாயிரம்) போயின பதாதி - சென்ற காலாட் படை; சொன்ன புரவியின் இரட்டி - கீழே கூறப்பட்ட குதிரைத் தொகையினும் இரு மடங்காகும் (எண்பதினாயிரம்). போல், ஆம் -அசைகள். இது சேனையின் தொகுதி கூறியது. நால்வகைப் படைகளையும் இப்பாடலில் தொகுத்துச் சொல்லிய கவிஞர், இனி அவற்றைத் தனித்தனியே விவரிப்பார். (10) |