5563. | அந் நெடுந்தானை சுற்ற, அமரரை அச்சம் சுற்ற, பொன் நெடுந்தேரில் போனான்-பொருப்பிடை நெருப்பின் பொங்கி, தன் நெடுங்கண்கள் காந்த, தாழ் பெருங் கவசம் மார்பில் மின்னிட,வெயிலும் வீச,-வில் இடும் எயிற்று வீரன். |
வில் இடும்எயிற்று வீரன் - ஒளி வீசுகின்றகோரைப் பற்களை உடைய வீரனான சம்புமாலி; அந் நெடுந்தானை சுற்ற - அவ்வாறான பெரிய சேனைகள் தன்னைச் சூழ்ந்து வரவும்; அமரரை அச்சம் சுற்ற - தேவர்களைப் பயம் சூழ்ந்து கொள்ளவும்; தன் நெடுங் கண்கள் காந்த - தன் பெரிய கண்கள் கோபத்தால் ஒளி வீசவும்; மார்பில் தாழ் பெரும் கவசம்மின்னிட வெயிலும் வீச - மார்பில் தங்கிய பெரிய கவசம் ஒளிவி்ட்டுமின்னலிடம் தோன்றும் ஒளிபோன்று பிரகாசிக்கவும்; பொருப்பிடை நெருப்பின் பொங்கி - மலையிடையே உள்ள நெருப்பு போல சினங்கொண்டு;பொன் நெடும் தேரில் போனான் - பொன் மயமான பெரிய தேரில் ஏறிச்சென்றான். சம்புமாலியால்அனுமனுக்கு ஆபத்து வருமோ என்ற ஐயத்தால், அமரரை அச்சம் சுற்றியது. பொருப்பினிடையிலுள்ள நெருப்பு, தேரின் நடுவில் சினம் கொண்டுதங்கியிருந்த சம்புமாலிக்கு உவமை ஆயிற்று. 'வீரன், தானை சுற்றத் தேரில் போனான்' என இயையும். (14) |