சம்புமாலி அணிவகுத்து வருதலும்
அனுமன் போருக்குஅமைந்து நிற்றலும்

5569.

ஆண்டுநின்று, அரக்கன், வெவ்வேறு அணி வகுத்து,
                            அனிகம்தன்னை,
மூண்டு இருபுடையும், முன்னும், முறை முறை முடுக
                            ஏவி,
தூண்டினன், தானும்திண் தேர்; தோரணத்து
                           இருந்த தோன்றல்,
வேண்டியதுஎதிர்ந்தான் என்ன, வீங்கினன், விசயத்
                           திண் தோள்.

     அரக்கன் ஆண்டுநின்று - சம்புமாலி அங்கிருந்து; அனிகம் தன்னை-தனது சேனையை; வெவ்வேறு அணி வகுத்து - வெவ்வேறு
அணியாகப்பிரித்து; இரு புடையும் முன்னும் முறை மூண்டு முடுக ஏவி -
அனுமனதுஇரண்டு பக்கங்களிலும் எதிரிலும் முறைமுறையாக மூண்டு விரையும்
படிஆணையிட்டு; தானும் திண் தேர் தூண்டினன் - தானும் தனது வலிய
தேரைச் செலுத்திக் கொண்டு சென்றான்; தோரணத்து இருந்த தோன்றல் -
(அப்போது) தோரணத்தின் மீது அமர்ந்திருந்த அனுமன்; வேண்டியது
எதிர்ந்தான் என்ன -
தான் விரும்பியது தன்முன் எதிர்ப்பட்டது என்று;
விசயத் திண்தோள் வீங்கினன் -
தனது வெற்றி தரும் வலிய தோள்கள்
பூரிக்கப்பெற்றான்.

     சம்புமாலிசேனையை அணி வகுத்துக் கொண்டு தேரில் வருவதைப்
பார்த்து, 'நாம் நினைத்தது வந்தது' என்று அனுமன்
 மகிழ்ந்தான்.அரக்கர்
போருக்கு வரவில்லையே என்று எதிர்பார்த்து இருந்ததை 5564 ஆம்
செய்யுளில் கூறினார். விசயம் - வெற்றி.                         (20)